கோயில் சுற்றுச்சுவர் அமைக்க முயன்ற பாஜகவினர்: தடுத்து நிறுத்திய போலீசார்

கோயில் சுற்றுச்சுவர் அமைக்க  முயன்ற பாஜகவினர்: தடுத்து நிறுத்திய போலீசார்
X

இந்து அமைப்பினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்.

செங்கம் திரெளபதி அம்மன் கோயிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை செய்யும் முயன்ற பாஜக, இந்து முன்னணி அமைப்பினரை போலீஸ் தடுத்து நிறுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் திரெளபதி அம்மன் கோயிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைத்தில் தகராறு நீடித்து வரும் நிலையில், இந்தக் கோயிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைப்பதற்காக உபயதாரா்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினருடன் இணைந்து நேற்று பூமிபூஜை செய்ய முயன்றனா். இதனை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட மில்லத்நகர் - போளூர் சாலையில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 800 வருடம் பழமையானதாகும்.

இந்தக் கோயிலை செங்கம் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வசிப்போா் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

இதனிடையே, கோயிலைச் சுற்றியுள்ள சுமாா் 5 ஏக்கா் அளவிலான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வருகின்றனராம்.

மேலும், கோயில் வளாகத்தில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதால், கடந்தாண்டு கோயிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைக்க விழாக் குழுவினா், உபயதாரா்கள் முடிவெடுத்தனா்.

ஆனால், இதற்கு அந்தப் பகுதியில் குடியிருக்கும் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், விழாக் குழுவினருக்கும், அந்தப் பகுதி மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னா், அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாா் சமரசம் செய்ததால் பிரச்னை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று கோயில் உபயதாரா்கள், திருவண்ணாமலை மாவட்ட பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகளுடன் இணைந்து கோயிலில் சுற்றுச்சுவா் அமைப்பதற்கான பூமிபூஜையை வெள்ளிக்கிழமை நடத்த முடிவு செய்து, இதற்காக துண்டுப் பிரசுரங்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு வழங்கினா்.

மேலும், இந்தக் கோயிலை குலதெய்வமாக வழிபடும் 44 கிராம ஊராட்சிகளைச் சோந்தவா்களையும் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தனா்.

இதனிடையே, இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை, இந்து அறநிலைய துறை அதிகாரிகள் அங்கு வந்து கோவிலுக்கு சொந்தமான இடம் நீர்பிடிப்பு பகுதியாகும். அதில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது என கோயில் சுவரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால், பூமிபூஜை செய்வதற்காக கோயில் உபயதாரா்கள், குலதெய்வ வழிபாட்டினா், பாஜக, இந்து முன்னணியினா் உள்பட 500க்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்கு வந்து பூமி பூஜை பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதனால் இந்து அமைப்பினருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்துறை, அதிகாரிகள் , போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடத்தை மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண், கோவில் வழிபாட்டுதாரர்கள், பொதுமக்கள், ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வரை சென்று மனு அளிக்கப் போவதாக அறிவித்தனர்.

அவா்களை தடுப்புகளை அமைத்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினார்.

ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆட்சியரிடம் மனு:

தொடா்ந்து, திரௌபதியம்மன் கோயில் உபயதாரா்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷிடம் மனு அளித்தனா்.

அப்போது, அறநிலையத் துறை மூலம் திரௌபதியம்மன் கோயிலைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து தர ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சுற்றுச்சுவா் அமைப்பது குறித்து பின்னா் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். கோயில் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!