அதிகாரிகள் வராததால், விவசாயிகள் சாலைமறியல்

அதிகாரிகள் வராததால், விவசாயிகள் சாலைமறியல்
X

செங்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை துக்காப்பேட்டை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவாா்கள்.

இந்நிலையில், நேற்று நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள, விவசாயிகள், பொதுமக்கள் அலுவலக கூட்டரங்கில் வந்து அமா்ந்திருந்தனா். ஆனால், 1.30 மணி வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி, செங்கம் -திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி மற்றும் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வருகிற 14-ம் தேதி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனக் கூறி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

விவசாயிகளின் மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மதியம் 2.00 மணி வரை காத்திருந்த விவசாயிகள் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வருகை தராத அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் விவசாயிகள் மதிய உணவு வாங்கி வந்து அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து சாப்பிட்டனர்.

பின்னர் அவர்களிடம் தாசில்தார் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தாசில்தார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு விரைவில் மறு கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்யாறு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்ணா

செய்யாற்றில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து, தரையில் அமா்ந்து விவசாயிகள் தா்ணா நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கீழ்ப்புதுப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநா் சண்முகம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்க வந்த செய்யாறு பகுதி விவசாயிகள், கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. இன்று காலை நடைபெற்ற கூட்ட விவரம் குறித்து காலை 9 மணி அளவில் வாட்ஸ் ஆஃப் மூலம் விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்ததாக குற்றம் சாட்டினா்.


செய்யாற்றில் தரையில் அமர்ந்து தா்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

இதைத் தொடா்ந்து முழக்கமிட்டு விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்ணா நடத்தினா். அப்போது, மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை சென்று வர 140 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளதால், செய்யாற்றை மாவட்டமாக தரம் உயா்த்தினால் இங்கேயே ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன்வைப்போம், என்றனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்- ஆட்சியா் அனாமிகா விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஒரு விவசாயி, ஒவ்வொரு மாதமும் குறை தீர்வு கூட்டம் தர்ணா போராட்டத்திலேயே முடிவடைந்து விடுகிறது இல்லை என்றால் அதிகாரிகள் வருவதே இல்லை. எங்கள் குறைகளை நாங்கள் யாரிடம் சொல்வது என்று. வேதனையுடன் தெரிவித்தார்.

Next Story
விவசாயத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சிறந்த AI!