மாலத்தீவில் உயிரிழந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு
தீ விபத்தில் உயிரிழந்த தேன்மொழி.
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் தரை தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். இதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
விபத்தில் காரைக்குடியை சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில், திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் பலியானதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அவர்களுடைய விவரங்கள் குறித்து விசாரணை நடந்தது.
அதில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, மலையனூர்செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட மல்காபூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தேன்மொழி(45) என்பது உறுதியானது.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மல்காபூர் கிராமத்துக்கு நேரில் சென்று, தேன்மொழியின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். தமிழக அரசின் உத்தரவுபடி, தேன்மொழியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்படுவதாக கூறினர்.
தேன்மொழி இறந்தது குறித்து கணவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறிய சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம்.
எனது மனைவி பிள்ளைகளோடு நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நான் கூலி வேலை செய்து பிழைத்து வந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தனி வீட்டை கட்டி உள்ளேன் அதில் அவர்கள் குடும்பமாய் வாழ வேண்டும். என்றைக்காவது என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ்வேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பு இரு விட்டாரும் சமாதானம் பேசி பஞ்சாயத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வைத்தனர். அதன் பின்பு என் மனைவி கடன் பிரச்சினை இருப்பதால் அதனை தீர்ப்பதற்கு நான் மாலத்தீவு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் இறந்த செய்தி கூட எனக்கு தெரியாது கடந்த புதன்கிழமை அவர் இறந்துள்ளார் ஆனால் எனக்கு மறுநாள் தான் தெரியவந்தது. நாங்கள் முறைப்படி பிரியவில்லை. நான் மனைவியுடன் சேர்ந்து வாழ தான் ஆசைப்பட்டேன் ஆனால் முடியாமல் போய்விட்டது. தற்போது எனது மனைவி என்ற உரிமையில் அவளுக்கான இறுதி சடங்கு செய்வதற்கு எனது மனைவி உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. இறுதி சடங்கு செய்வதற்காக என்னிடம் என் மனைவியின் உடலை ஒப்படைக்க வேண்டும். என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu