அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்
திருமண வயது வருவதற்கு முன்பே அதாவது பள்ளி பருவத்திலேயே குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருமணம் என்றால் என்ன என்பது தெரிய வருவதற்கு முன்பே இது போன்ற திருமணங்களை செய்து வைப்பதால் அவர்களின் அறிவு திறன் பாதிக்கப்பட்டு எதிர்கால சந்ததிகளும் பாதிக்கப்படும் இது குறித்து விழிப்புணர்வும் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்த இருந்ததை அதிகாரிகள் உரிய நேரத்தில் தடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அவர்களுக்கு தகவல்அளிக்க உதவி எண்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆடி மாதம் முழுக்க திருமணங்கள் நடைபெறாத நிலையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து முகூர்த்தங்கள் அதிகம் நடந்து வருகின்றன.திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 1098 மற்றும் 181 ஆகிய எண்களுக்கு குழந்தை திருமணம் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பட்டது.
அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை தலைமையிலான குழுவினர் கடந்த 4 நாட்களில் பல்வேறு வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக செய்த சோதனையின் அடிப்படையில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
தண்டராம்பட்டு, செங்கம் அருகே 2 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தேசூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் வயது 25, டெய்லர். இவருக்கு அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நேற்று காலை வீட்டில் திருமணம் நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் பரமசிவம், ஊர் நல அலுவலர் பழனியம்மாள் ஆகியோர் ராம்குமாரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கல்யாண கோலத்தில் ராம்குமார் மற்றும் சிறுமி இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.
மேலும் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி சிறுமியை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் செங்கம் அடுத்த கோட்டங்கல் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான விக்னேஷ்(24) என்பவருக்கு, அவரது வீட்டில் நேற்று காலை தானிப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்
மேலும் கடந்த நான்கு நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நான்கு பெண்களும் திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் படிப்பிற்கு உறுதி செய்த பிறகு பெற்றோர்களுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu