கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பாம்பு கடித்து உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்டது காரப்பட்டு என்ற கிராமம். கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்குமார். விவசாயி, இவருக்கு 23 வயதாகிறது. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.. மனைவி பெயர் நிரோஷா.
இந்நிலையில் நேற்று மாலை பரமேஷ் குமார் தனது மனைவி நிரோஷா உடன் வீட்டிற்கு பின்புறம் உள்ள தங்களது விவசாயக் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர். கயிறு கட்டி கிணற்றில் வாலியால் தண்ணீர் எடுத்திருக்கிறார்கள். அப்போது திடீரென பரமேஷ் குமார் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார்.
பரமேஷ் குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீந்தியபடி அங்கு இருந்த கட்டையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது கிணற்றின் கரையில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு பரமேஷ் குமாரை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை பாம்பு கடித்து விட்டதாக மேலே நின்று கொண்டிருந்த மனைவி நிரோஷாவிடம் கூறியபடி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி நிரோஷா அலறி அடித்தபடி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த கிராம மக்கள் கிணற்றில் குதித்து, மயங்கிக்கிடந்த பரமேஸ்குமாரையும் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால், அந்த பாம்பு அங்கேயே இருந்ததால், கிணற்றுக்குள் இறங்குவதற்கு முடியவில்லை. அதனால்உடனே செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் கரையில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதற்கு இடையில் கிணற்றில் மூழ்கியதால் பரமேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை மீட்டு புதுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது மாப்பிள்ளை பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu