செங்கம் அருகே கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு வடை சுட்ட பக்தரால் பரவசம்

செங்கம் அருகே கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு வடை சுட்ட பக்தரால் பரவசம்
X

கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளை  விட்டு வடை சுட்ட பக்தர்

செங்கம் அருகே நடந்த மயான கொள்ளை திருவிழாவில், கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு வடை சுட்ட பக்தரால், பரவசம் ஏற்பட்டது.

செங்கம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பக்தர் ஒருவர் வடை சுட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த வடையை சாப்பிடுவதன் மூலம் பலன் கிடைக்கும் என்பதால் பலர் அதனை வாங்கிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். இங்கு மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு மயான கொள்ளை விழா கொண்டாடப்பட்டது.

இந்த மயான கொள்ளை திருவிழாவுக்காக ஊர் பொதுமக்கள் ஒரு வாரம் முன்பாகவே விரதம் இருந்து பக்தியுடன் இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் அங்காளம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்த பின்பு, சென்ற ஆண்டு அம்மனை தரிசித்து வேண்டுதல் கொண்டவர்கள் இந்த ஆண்டு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பக்தர்கள் தீ மிதித்தல், உரல்மீது படுக்கை விரித்து அதன் மீது படுத்து நேர்த்திக் கடன் செலுத்தியும், நெஞ்சின் மீது சுமார் 50 கிலோ எடை கொண்ட கல் உரலை வைத்து மஞ்சள் மற்றும் அரிசியை இடித்து நேர்த்திக்கடன் செலுத்தியும், முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தியும், உடல் முழுவதும் வேல் குத்தி மயில் தோகை அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இந்நிலையில் ஒரு பக்தர் கொதிக்கும் எண்ணெயில் இருக்கும் வடையை வெறுங்கையால் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.

லட்ச ரூபாய் செலவு செய்தும் கிடைக்காத குழந்தை பாக்கியம் கோயிலில் அம்மனுக்கு படையல் இட்டு பிரசாதமாக வழங்கப்படும் , கொதிக்கும் எண்ணெயில் எடுக்கும் வடையை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிப்பதோடு அந்த பக்தர் சுடும் வடையை குழந்தை இல்லா தம்பதிகள் பக்தியுடன் வாங்கிச் சென்றனர்.

இந்த மயான கொள்ளை திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story