பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி அருகே மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 608 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் உடல்நலக்குறைவால் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று மதிய உணவை சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரும் சமைத்துள்ளனர்.
மதிய உணவு பரிமாறி கொண்டிருந்தபோது சில மாணவர்களின் உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை சாப்பிட்ட 47 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் உணவை சாப்பிடாமல் நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாணவர்கள் தானிப்பாடி அருகில் உள்ள ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், ஆர்டிஓ வெற்றிவேல், டிஎஸ்பி அஸ்வினி, ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தாசில்தார் பரிமளா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார். மேலும் பெற்றோர்களிடமும் நலமுடன் இருந்த மாணவ-மாணவிகளிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சமையலர் லட்சுமி, உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாணவர்களை கண்காணித்து முழுமையான சிகிச்சைக்கு பின் 100 சதவீத ஆரோக்கியத்தை உறுதி செய்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
6 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu