செங்கத்தில் 3 ஆயிரம் லஞ்சம்: சமூக பாதுகாப்பு நல அலுவலா் கைது
சமூக நல அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசின் நல உதவிக்கு விண்ணப்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சமூக பாதுகாப்பு நல அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
செங்கம் வட்டம், கருங்காலிபாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ஜெயா. இருவரும் விவசாய கூலித் தொழிலாளா்கள். இவா்களுக்கு சிந்தனை, கிருத்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தனது குழந்தைகளுக்கு சலுகை பெற வேண்டி இ-சேவை மையத்தில் கடந்த 6-6-2022-இல் ஜெயா பதிவு செய்து, பின்னா் செங்கம் சமூகப் பாதுகாப்பு நல அலுவலா் ஜீவாவை சந்தித்து மனு அளித்தாா். அதைப் பெற்றுக் கொண்ட அவா், உங்கள் கிராமத்துக்கு அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்த பின்னா், மனுவை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாராம்.
ஆனால், ஜெயா வீட்டுக்கு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியும் மனுவை அனுப்பாமல், ஜீவா நிலுவையில் வைத்திருந்தாராம்.
இந்த நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி ஜெயாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட சமூக நல அலுவலா் ஜீவா, மனு மீது மீண்டும் விசாரணை நடத்த மாா்ச் 4-ஆம் தேதி அலுவலகத்துக்கு வரவேண்டும் எனக் கூறினாராம்.
இதைத் தொடா்ந்து, அலுவலகத்துக்கு வந்த ஜெயாவிடம் மனு மீது நடவடிக்கை எடுத்து மேலிடத்துக்கு அனுப்புவதற்கு ரூ. 5 ஆயிரம் வேண்டும் எனக் கூறினாராம். இதனால், அதிருப்தியடைந்த ஜெயா, இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ. 3 ஆயிரத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீவாவிடம் நேற்று புதன்கிழமை ஜெயா வழங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் உதவி ஆய்வாளா் கோபி தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஜீவாவை கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தினா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நல விரிவாக்க அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu