ஆரணி அருகே சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிப்பு

ஆரணி அருகே சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிப்பு
X
ஆரணி அருகே கோவில் விழாவில் சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏ.சி.எஸ்.நகரில் ஏழுமலையானுக்கு புதியதாக கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவில் எதிரே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.லட்டு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 5 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சாமி திருக்கல்யாணம் பார்க்க வந்த இடத்தில் தங்களது மாங்கல்யம் பறிபோனதால் கதறி அழுதனர்.மஞ்சள் கயிறு எடுத்து வந்து கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது 2 பெண்களும் பெயரையும் ஊரையும் மாற்றி மாற்றி கூறுவதால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story