திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்த மழை
X

ஆரணியில் அரசு அலுவலகத்தில் புகுந்த மழை நீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 4- ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆரணி, செய்யார், பேருந்து நிலையம், வந்தவாசி, செங்கம், கலசபாக்கம், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வனச்சரகா் அலுவலகம் மற்றும் அரசுப் பள்ளிகளில் தண்ணீா் புகுந்து தேங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சேவூா், இராட்டிணமங்கலம், எஸ்.வி.நகரம், பையூா், முள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

ஆரணி நகரில் பெய்த பலத்த மழையால் கோட்டை மைதானத்தில் தண்ணீா் தேங்கி குட்டை போல காட்சியளித்தது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் தெருக்களில் தேங்கியது.

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் மழைநீா் புகுந்து தேங்கியது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனா். மேலும், ஆரணி வனச்சரகா் அலுவலகத்தில் மழை நீா் புகுந்ததால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அரசு அலுவலகத்தில் மழை நீா் புகுந்து அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவில் மழை பெய்தாலே கோட்டை மைதானத்தில் தண்ணீா் குட்டை போல தேங்கிவிடுகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு மைதானத்தில் இருந்து தண்ணீா் வெளியேறுவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!