சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

சேவூரில் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் காலனி பகுதியில் சாலை மற்றும் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு, 70 சதவீத பணி முடிந்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத பணி முடியாமல் உள்ளது.

தற்போது கால்வாய், சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதுபற்றி பலமுறை சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கழிவுநீரும் மழைநீரும் செல்ல வழியில்லாமல் வீடுகளில் புகும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்கக்கோரி நேற்று ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் காலனி பகுதி அருகே திடீரென 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாதரணி, துணைத்தலைவர் ஏ.கே. குமரவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் அங்கு வந்தனர். அதிகாரிகளிடம், கிராம மக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். போலீசார் கூறுகையில், தேர்தல் பணியில் அதிகாரிகள் இருப்பதால் அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணப்படும். தற்போது சாலை மறியலை கை விடுங்கள் எனக் கூறினர்.

மேலும் ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, சீனிவாசன் ஆகியோர் கூறுகையில், ஆரணி ஒன்றியத்தில் அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடப்பதாலும் தேர்தல் பணி நடப்பதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாலும் அங்குச் சென்று கொண்டிருப்பதாலும் தேர்தல் பணி முடிந்ததும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள், ஒப்பந்ததாரரை அழைத்துப் பேசி தீர்வு காணப்படும் என போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story