ஆரணி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இராட்டினமங்கலம் காலணி பகுதியில் இருந்து சேவூர் காலனி வழியாக கால்வாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் கழிவுநீர் செல்லும் கால்வாயை சேவூர் காலனி மக்கள் அடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதனிடையே அண்மையில் பெய்த பலத்த மழையால் இராட்டினமங்கலம் காலணியில் கழிவுநீர் தேங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தாலும் கொசுத்தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார், பிரமீளா, கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத்தமன், லோக சுந்தரி, கோபால் ஆகியோர் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர்.
அப்போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், சுந்தரேசன், மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ராட்டினமங்கலம் காலனி பகுதியில் இருந்து வரக்கூடிய கால்வாயை அடைக்கப்பட்டுள்ள இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவூர் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூரில் திடீரென கருங்கல்லை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களைகலைந்து போக செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய் இடத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இப் பணியின் போது சேவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரணி, இராட்டினமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வம், 2 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் சித்ரா வெங்கடேசன், மகேஸ்வரி, ஊராட்சி எழுத்தர்கள் உள்பட பலர் குவிந்திருந்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
அதிகாரிகளும் போலீசாரும் இரு தரப்பினரையும் அங்கு இருந்த பொது மக்களையும் அமைதிப்படுத்தி சமரசம் செய்தனர்.
இதை எடுத்து கால்வாய் சீரமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu