ஆரணி அருகே பூட்டிய வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை?

ஆரணி அருகே பூட்டிய வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை?
X
ஆரணி அருேக பூட்டிய வீட்டில் 19 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன், கூலித்தொழிலாளி. இவர், கல்லேரிப்பட்டில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், கல்பனா, சங்கீதா என்ற இரு மகள்களும் உள்ளனர். கல்பனாவுக்கு திருமணமாகி வந்தவாசியில் வசித்து வருகிறார். சங்கீதா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைய மகள் சங்கீதாவை பார்ப்பதற்காக காமாட்சி சென்னை சென்றுள்ளார். தருமன் தினமும் அரிசி ஆலைக்கு வேலைக்கு போகும்போது, வீட்டுக்கு அருகில் உள்ள செங்கல் இடுக்கில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம்போல் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு தருமன் வேலைக்கு சென்று விட்டார்.

மீண்டும் இன்று வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவுகள் பூட்டிய நிலையிலேயே இருந்தது. அவர் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகையை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

எனினும், மனைவி காமாட்சி வந்து பார்த்த பிறகு தான் நகைகள் இருக்கிறதா, இல்லையா? என விவரம் தெரிய வரும், என ஆரணி தாலுகா போலீசில் தருமன் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business