உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்

உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்
X

ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரமூட்டைகள் வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட 11 பேர் உறுப்பினராகவும் செயலாளராக சுந்தர்ராஜன் என்பவரும் நிர்வகித்து வருகின்றனர். இந்த சங்கம் மூலமாக ஆதனூர், ஓண்டிகுடிசை, மொரபந்தாங்கல், சங்கீதவாடி, அப்பந்தாங்கல், உள்ளிட்ட 7 கிராமத்தில் உள்ள 900 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்படும்.

இந்த நிலையில் மொரப்பதாங்கல், சங்கீதவாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொட்டாஷ், யூரியா விவசாய உபகரணங்கள் வழங்கப்படவில்லை தனிநபர் ஓருவருக்கே கள்ள சந்தையில் விற்று விட்டதாக கூறி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் வெளியே விவசாயிகள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க தலைவர், செயலாளர் கூறுகையில், இச்சங்கத்தில் 900 விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் உரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான உரங்கள் வழங்கிட உத்தரவு உள்ளது. ஒண்டி குடிசை பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் சுமார் 30 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய உரத்தினை 2 டிராக்டரில் கொண்டு சென்றனர். இதனை தவறாக நினைத்து இங்கு போராட்டம் செய்கிறார்கள்.

நகை கடன் தள்ளுபடி விபரத்தினை மாவட்டத்தில் கேட்டு இருப்பதால் அதுகுறித்த பணி நடக்கிறது. எனவே இன்று உரம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. அதனை சிலர் தவறாக திரித்து இது போன்ற பிரச்சினையை உருவாக்கியுள்ளனர் என்றார்.

Tags

Next Story