ஆரணியில் பட்டு சேலை வியாபாரிகளிடம் 20 கோடி மோசடி: தலைமறைவான கும்பல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பட்டுச்சேலை வியாபாரிகள்
பட்டுச் சேலை கொள்முதல் செய்து ரூ.20 கோடி மோசடி செய்தவர்களிடம் இருந்த பணத்தை மீட்டு தரக் கோரி ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், லட்சுமணன், பாஸ்கரன், புண்ணியகோட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டு சேலைகள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் ஆரணி சில்க் சிட்டி என்றே அழைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் நகரமாகவும் ஆரணி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆரணிக்கு வந்து பட்டு சேலைகள் கொள்முதல் செய்கின்றனர்.
அந்த வகையில் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் துணிக்கடை நடத்தி வரும் விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி காயத்ரி மற்றும் அவருடன் வந்த மாதவி ஆகியோர் ஆரணியில் வியாபாரிகளிடம் பட்டு சேலை கொள்முதல் செய்துள்ளனர்.
முதலில் பணம் கொடுத்து எங்களிடம் பட்டுச்சேலை பெற்றுக் கொண்டார்கள். பிறகு கடனாக சுமார் ரூ.20 கோடிக்கு எங்களிடம் பட்டுச்சேலையை கொள்முதல் செய்து அதற்குண்டான தொகைக்கு முன்தேதியிட்ட காசோலையை வழங்கியும், கடனாகவும் உற்பத்தியாளர்களிடம் பட்டுச்சேலைகளை பெற்றுக் கொண்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா சமயத்தில் வியாபாரம் மந்தமாக இருந்த காரணத்தினால், நாங்களும் நம்பிக்கையின் பேரில் கொடுத்தோம். அதைத் தொடர்ந்து 2 வருட காலம் ஆகியும், பணத்தை திருப்பி தரவில்லை. பின்னர் அவர்கள் வீடு தேடி சென்று கேட்டதில் தருகிறேன் என்று கூறி காலம் கடத்திய நிலையில் தலைமறைவாகிவிட்டார்கள். காசோலையும் திரும்ப வந்து விட்டது.
கடந்த 2 வருடங்களாக தேடியும், அவர்கள் கிடைக்கவில்லை. ஆரணி கொச பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் அந்த ஆந்திர பெண்மணிகளுக்கு உடனடியாக இருந்துள்ளாராம்.
இதற்கிடையில் ஆரணி வியாபாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காயத்ரி மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு ஆரணி நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்துள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை செய்து , உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும். என வியாபாரிகள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu