திருத்தணி: அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம் அபராதம்!
விதிமுறைகளை மீறி திறந்து வைத்திருந்த செல்போன் கடையை திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி ஆய்வு செய்த காட்சி.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழக அரசு இந்த மாதம் 10ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
இதில் காய்கறி மளிகை, பூ மற்றும் பழம், இறைச்சி கடைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட துணி, ஹார்டுவேர்ஸ், மொபைல் போன் போன்ற சில கடைகள் அரசு உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்வதாக, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில் திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை மற்றும் சூப்பர் மார்க்கெட் சந்து ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சூப்பர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
அதிகாரிகள் வருவது குறித்து தகவல் அறிந்ததும் 4 வாடிக்கையாளர்களை கடைக்குள் வைத்து பூட்டினர். சந்தேகமடைந்த தாசில்தார் ஜெயராணி கடையை திறந்து பார்த்தபோது 4 நபர்கள் உள்ளே இருந்ததைக் கண்டு உடனடியாக அவர்களை வெளியேற்றினார். தொடர்ந்து மொபைல் போன் கடை உரிமையாளரை எச்சரித்து, 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் ஹார்ட்வேர் கடைக்கு 5000 ரூபாய், ஒரு துணிக்கடை, விதைநெல் உட்பட 3 கடைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம், மொத்தம் 5 கடைகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதத்தை தாசில்தார் விதித்தார். தொடர்ந்து பஜாரில் சுற்றித்திரிந்த மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்தும், நடைபாதை கடைகளை அகற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu