வழக்கு பயத்தில் தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல்
ஆறுதல் கூறும் பிரேமலதா விஜயகாந்த்.
திருத்தணி :
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரவண பொய்கை திருமணம் பகுதியை சேர்ந்தவர் நந்தன் சமையல் கலைஞர். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு வழங்கிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அங்குள்ள நியாயவிலைக் கடையில் பெற்றுள்ளார்.
அப்பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்து பார்த்தபோது புலியில் இறந்த நிலையில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து நியாய விலை கடை விற்பனையாளர் சரவணன் என்பவருக்கு புகார் செய்துள்ளார். இருப்பினும் அவர் கண்டுகொள்ளாத நிலையில் புளியில் பல்லி குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசார் நந்தனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாகவும், அவர் மீது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரம் செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி பெரும் பீதியில் இருந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவரது இளைய மகன் குப்புசாமி என்ற பாபு(35) வீட்டில் தனியாக இருந்த போது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதில் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருத்தணியில் நந்தன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில்,
தமிழக அரசு வழங்கிய ரேஷன் பொருட்களில் பல்லி இருப்பதாக தகவல் தெரிவித்தவர் மீது போலீசார் மிரட்டி வழக்குப்பதிவு செய்த பயத்தால் நந்தன் மகன் பாபு இறந்துள்ளார். இச்சம்பவத்திற்கு தேமுதிக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அதிமுக அரசு பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 வாங்கியபோது ஐந்தாயிரம் வழங்கவேண்டும் என்று கூறிய ஸ்டாலின் பொங்கலில் தரமற்ற 21 பொருட்கள் மட்டும் வழங்கி மக்களை ஏமாற்றுகிறார். இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். திமுக அரசு நிறைவேற்றி வரும் நல்ல திட்டங்களை தேமுதிக வரவேற்கிறோம்.
இந்த சந்திப்பில் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நிர்வாகிகள் ஆயில் மில் சரவணன், புஜ்ஜி முரளி, ஒண்டிகுப்பம் சேகர், மனோஜ், திருத்தணி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி. தென்னரசு, சுரேஷ், ஸ்ரீகர், கணபதி, ரஜினி, சுதாகர், முரளி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu