மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்தது மக்கள் சாலை மறியல்

திருத்தணியில் லேசான மழைக்கே மழைநீருடன் கலந்து கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் சாலையில் மின் கம்பத்தை சாய்த்தும், முட்செடிகளைப் போட்டும் மறியல் செய்து, நகராட்சி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பெய்த லேசான மழைக்கு திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறும் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜோதி நகரிலிருந்து புதூர் செல்லும் பிரதான சாலையில் மின்கம்பத்தை சாலையில் போட்டும், செடிகளை சாலைகளில் கொட்டியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கழிவுநீர் வெளியேற முறையாக வசதி ஏற்படுத்துவதால் வீடுகளில் கழிவு நீருடன் மழை நீர் புகுந்தது என குற்றம் சாட்டினர். ஜே.சி.பி மூலம் கால்வாய் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு மேலும் பரபரப்பு கூடியது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால், சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக அங்கு பரபரப்பாகவும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!