திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
X

மர்ம காய்ச்சலுக்கு பலியான பூபாலன்.

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் மர்ம காய்ச்சல் இருப்பதால் சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (எ) பூபாலன் . இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார் . கடந்த சில நாட்களாக பூபாலனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலையில் திடீரென்று காய்ச்சல் மேலும் அதிகமாகி, வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே தன்ராஜ் கண்டிகை கிராம மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. போதுமான சிகிச்சை மேற்கொள்ளப்படாததால், காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காய்ச்சலுக்கு உயிரிழந்த பூபாலன் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சலால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future