திருத்தணி பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க. வினர் சாலை மறியல்

திருத்தணி பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க. வினர் சாலை மறியல்
X

திருத்தணி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருத்தணி பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க. வினர் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தன்(65). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருப்பதாக கூறி நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் புகார் செய்துள்ளார்.

இருப்பினும், விற்பனையாளர் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறவே தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர் விசாரணை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதாக நந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதியின்றி மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நந்தன் மகன் பாபு (எ) குப்புசாமி(35) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.

பொங்கல் தொகுப்பு பல்லி இருப்பதாக புகார் செய்த தந்தை மீது போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த அவரது மகன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அரசின் அலட்சியத்தால், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறி அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னிலையில் 200க்கும் மேற்ப்பட்ட அ.தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் . பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், பல்லி இறந்த பரிசு பொருட்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியல் நீடித்தால் நகரில் அனைத்து பதில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிடாத நிலையில் திருத்தணி கோட்டாட்சியர் சத்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஆவின் மாவட்ட தலைவர் வேலஞ்சேரி ஜெ.த.கவிச்சந்திரன், திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் இ.என்.கண்டிகை எ‌. இரவி, டி.டி. சீனிவாசன், சக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் நாகபூண்டி.கோ.குமார், ஜெ‌.பாண்டுரங்கன், சாந்திப்பிரியா சுரேஷ், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் ஏ.ஜி.இரவிச்சந்திரன், நிர்வாகிகள் பள்ளிப்பட்டு ஜெயவேலு, கே.ஜி. கண்டிகை தங்கவேலு, ஆர்.கே.பேட்டை அசோக் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!