திருத்தணியில் வட்டார பொது சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

திருத்தணியில் வட்டார பொது சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
X

திருத்தணியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் சுப்பிரமணியன், காந்தி திறந்து வைத்தனர்.

திருத்தணியில் ₹.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலுவலகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், காந்தி திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 இடங்களில், ரூ.3.55 கோடியில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பீரகுப்பம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூ..50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.


தொடர்ந்து வீரமங்கலத்தில் ₹.25 லட்சம் மதிப்பில் பாண்டரவேட்டில் ₹.20 லட்சம் மதிப்பில், மத்தூரில் ₹.20 லட்சம் மதிப்பில் என மொத்தம் மாவட்டம் முழுவதும்,12 இடங்களில் துணை சுகாதார நிலைய கட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மேலும், 2730 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், 1500 துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், தற்போது படிப்படியாக துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, 12 புதிய கட்டடங்கள், 3. 55 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, ₹.45.கோடி மதிப்பீட்டில் திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்காக புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனை திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.

இன்று சர்க்கரை நோய்கள் தினம் என்பதால் அனைத்து மருத்துவமனை களிலும் சிறப்பு முகாம் நடத்தி சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து, தரம் இல்லாத உணவகங்கள் மூடப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேசினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் செல்வவிநாயகம், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் உள்பட சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business