திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!
ஆர்கே பேட்டையில்போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் காந்தி
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உ ள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள ஆர்கே பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8 மணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. கீதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரியா ராஜ், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu