கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருத்தணியில் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
திருத்தணியில் கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்ய நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற லட்சியத்துடன் தமிழ்நாடு அரசு கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் மூலம் ஏழை எளியோருக்கு தளம் போட்ட வீடு கட்டித்தரப்படுகின்றது. இத் திட்டத்தின் கீழ் ரூ. 3.10 லட்சம் மதிப்பீட்டில் நடப்பாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் குடும்பங்கள் தேர்வு செய்ய ஏதுவாக கணக்கெடுக்கும் பணியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சியில் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடும்பங்கள் குறித்து நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
கிராமத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் பயனாளிகளின் குடிசை வீடுகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு செய்தார். குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற லட்சியத்தை அடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து தளம் போட்ட வீடு கட்டிக்கொடுக்க அரசு அலுவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா உட்பட இதர தகுதிகள் இல்லை என்று பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu