கத்தரிக்கோலை வயிற்றிற்குள் வைத்து தைத்த மருத்துவர்கள்: பெண் குற்றச்சாட்டு
திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கத்தரிக்கோலை வயிற்றிற்குள் வைத்து தைத்த மருத்துவர்கள்; நியாயம் கேட்டு பெண் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் வி.கே.ஆர். புரம் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரி, கணவர் பாலாஜி. இவர் 2008ஆம் ஆண்டு தனது 3வது பிரசவத்திற்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பிறப்பது கடினம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது.
குழந்தை பிறந்து 13 வருடம் கழித்து குபேந்திரிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண வலி என்று எண்ணி குடும்பத்தார் அலட்சியமாக இருந்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக வலி இருந்ததால் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் குபேந்திரி அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின் மூலம் முடிவு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளதாகவும், வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் உள்ளதாக மருத்துவர்கள் அறிந்து, அதனை குடும்பத்தாரிடம் மறைக்க முடிவு செய்ததாகவும் நோயாளிக்கு குடல்வால் நோய் உள்ளதாகவும் அதற்காக அப்ரண்டீஸ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதாகவும் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஸ்கேன் அறிக்கையை நோயாளி குபேந்திரி மற்றும் அவரது சகோதரி பார்த்துவிட்டு ஏன் மறைக்கிறார்கள் என்று கேட்டு தனது கணவர் பாலாஜியிடம் கூற அவருக்கும் மருத்துவர்களுக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. பின்னும் மருத்துவ நிர்வாகம் பாதிக்கப்பட்ட குபேந்திரியை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையிலும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் தென்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து கத்தரிக்கோல் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீக்கிய பொருளை மருத்துவ நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்காமலும், ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற மருத்துவ அறிக்கையை கேட்டால் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இனிமேல் இந்த அறிக்கை உங்களுக்கு எதற்கு என்ற கேள்வி கேட்டு அறிக்கை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட குடும்பம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதியும், தவறு செய்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியாக தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu