திருவள்ளூரில் விடுதி காப்பாளர் அட்டகாசம்: மாஜி ராணுவ வீரர் கலெக்டர் ஆபீசில் தர்ணா போராட்டம்..!
திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரி பேட்டையில் மாணவர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி காப்பாளர் கிருஷ்ணன் மீது ஆட்சியர் அலுவலகத்தில், கிழிந்த பனியனுடன் பரபரப்பு புகார் அளித்த சமையலரும், முன்னாள் ராணுவ வீரருமான பழனி.
Protests Today - திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தாலுகா உட்பட்ட அத்திமாஞ்சேரி பேட்டையில் மாணவர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி இயங்கி வருகிறது.இந்த விடுதியில் சமையலர் பழனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்று, அதன் பிறகு அரசு விதியின் படி சமையலர் பணியில் சேர்ந்தவர்.
இந்நிலையில் அதே விடுதியில் விடுதி காப்பாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். விடுதியில் சமையலுக்கு தேவையான எண்ணெய், அரிசி, பருப்பு போன்றவற்றை விடுதி காப்பாளர் கிருஷ்ணன் வெளியில் விற்பதை கண்ட பழனி அதனை தட்டிக்கேட்டுள்ளார்.
அதற்கு அதை கேட்க நீ யார்? நீ போய் என்னுடைய வீட்டை சுத்தம் செய். உன்னுடைய வேலை அதுதான் என்று கிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அதை செய்யவில்லை என்றால் உன்னை பணியிலிருந்து நான் நீக்கி விடுவேன். ஏற்கனவே மூன்று பேரை பணியிலிருந்து நீக்கி இருக்கிறேன். அடுத்ததாக உன்னை நான் நீக்கி விடுவேன் என கிருஷ்ணன் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதனை செய்ய முடியாது என மறுத்த முன்னாள் ராணுவ வீரர் பழனியை, விடுதி காப்பாளர் கிருஷ்ணன் என்பவர் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழனி மனு அளித்தார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு கிழிந்த பனியனுடன் தர்ணா போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பழனி ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதி காப்பாளர் கிருஷ்ணன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஆவேசமாக அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu