பறிமுதல் செய்த மதுபாட்டில்களை சாராய வியாபாரிக்கு விற்றதாக கூறி ஆர்ப்பாட்டம்
திருத்தணி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் பல்வேறு பகுதிகளில் காலை, இரவு நேரங்களில் கடைகளில், இரு சக்கர வாகனங்களில் சிலர் மது பாட்டில்கள் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருத்தணி முருகப்பாநகரில் புல்லி(எ) குமார் என்பவரின் வீட்டில் 750 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கூறப்படும் புல்லி (எ) குமார் தலைமறைவானார்.
போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த பதுபாட்டில்களை இரவு நேரத்தில் ஆட்டோவில் கடத்திச் சென்று சாராய வியாபாரி புல்லி வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக கூறி திருத்தணி காவல் ஆய்வாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். நடவடிக்கையாக எடுக்காத நிலையில் விரைவில் காவல் நிலையம் முன்பு காவல் நிலையத்தில் குறைந்த விலைக்கு மது விற்கப்படும் என்று பதாகை வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆர்பாட்டம் முடிவில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரனித் சாய் சந்தித்து புகார் மனு வழங்கினர். காவல் நிலையத்திலிருந்து மது பாட்டிகள் எடுத்துச் சென்று சாராய வியாரிக்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu