திருத்தணி அருகே ராணுவ வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

ஊராட்சி மன்ற அலுவலகம் (கோப்பு படம்)
திருத்தணி அருகே ராணுவ வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ம.க ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ராஜேஸ்வரி மூன்று குழந்தைகளுடன் கிராமத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்ய ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு செய்திருந்தார்.
இருப்பினும் பணி அட்டை வழங்க ஊராட்சி மன்றத் தலைவர் பா.ம.க வைச் சேர்ந்த வேணு (50) காலதாமதப் படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையில் ஜோத்பூரில் பணியாற்றி வரும் அவரது கணவரை பார்க்க குழந்தைகளுடன் சென்றிந்த ராஜேஸ்வரிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் போன் செய்து 100நாள் வேலை அட்டை வந்துள்ளது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். வெளியூரில் இருப்பதால் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதன் படி கிராமத்திற்கு வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பணி அட்டை கேட்ட போது ராணுவ வீரரின் மனைவிக்கு பணி அட்டை வழங்க முடியாது என்றும், பெண் என்றால் அரவணைத்து செல்ல வேண்டும், உனது கணவர் ராணுவ வீரர் என்பதால் இங்கு எதுவும் செய்ய முடியாது என்று தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
நடந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்து கண்ணீர் விட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் வேணுவின் பாலியல் தொல்லை குறித்து ராணுவ வீரர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். ராணுவ வீரர் மனைவிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu