திருத்தணி கோவிலில் மஞ்சப்பை விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருத்தணி கோவிலில்  மஞ்சப்பை விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
X

திருத்தணி கோவிலில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை தொடங்கி வைத்த கலெக்டர் 

திருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஞ்சப்பை விற்பனையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் மூலம் அமைக்கப்பட்ட தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் அந்த இயந்திரத்தை எளிய முறையில் பயன்படுத்துவதை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு 03.09.2021 அன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு, “பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை விற்பனை இயந்திரம் குறித்த விவரங்களை வழங்கவும், அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அளிக்கவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு தமிழக அரசு 22.08.2022 நாளிட்ட கடிதம் அனுப்பியுள்ளது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருவள்ளுர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம்.

திருவள்ளுர் மாவட்டத்தில் “ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருவள்ளுர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலும், திருவள்ளுர் பேருந்து நிலையத்திலும் நிறுவப்பட்டு துவங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு. கொண்டுவரப்பட்டது

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக. மேலும் ஒரு மஞ்சப்பை விற்பனை இயந்திரம் திருவள்ளுர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நிறுவப்பட்டு துவங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், ஆவடி பேருந்து நிலையத்திலும், பொன்னேரி பேருந்து நிலையத்திலும் விரைவில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் நிறுவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், அந்த இயந்திரத்தின் மூலம் பைகளை விற்பனை செய்யும்போது சேகரிக்கப்படும் தொகை மஞ்சள் துணிப்பைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இந்த முறையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை நிலையான முறையில் பராமரிக்க முடியும். இரண்டு புதிய 5 ரூபாய் நாணயங்கள் அல்லது ஒரு 10 ரூபாய் நாணயம் அல்லது ஒரு 10 ரூபாய் நோட்டை செலுத்தி துணிபைகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் .பி.ரவிச்சந்திரன், அறநிலையத்துறை துணை ஆணையர் .விஜயா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் .ரகுகுமார், சபரிநாதன், அறநிலை துறை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது