திருத்தணியில் பாதுகாப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணியில் பாதுகாப்பு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வாலிபர்கள் கஞ்சா போதையில் பட்டா கத்தி காட்டி பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் திருத்தணியிலிருந்து பூனிமாங்காடு வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். கிராமங்கள் நிறைந்த இப்பகுதியில் கஞ்சா போதையில் பைக்குகளில் அதிவேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்து மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பூனிமாங்காடு கிராமத்தில் இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் அதிவேகமாக செல்வதை அக் கிராமத்தை சேர்ந்த சிலர் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசி அவர்கள் கையில் வைத்திருந்த மூன்று பட்டா கத்திகள் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து கிராம இளைஞர்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது பைக் வேகமாக இயக்கியதில் சாலையோர மரத்தின் மோதியதில் பட்டா கத்தி சாலையில் வீசி பொதுமக்களிடமிருந்து வாலிபர்கள் தப்பி பைக்கில் பறந்தனர்.
தொடர்ந்து கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம் செய்து வருவதால், ஆத்திரமடைந்த கிராம பெண்கள் உட்பட 200-க்கும் மேற்ப்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து திருவாலங்காடு காவல் ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கிராமத்தில் சோதனை சாவடி அமைத்து இரவு நேரங்களில் போலீசார் ரோந்து தீவிரப்படுத்தி கிராமமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று உறுதி கூறியதை ஏற்று சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலைமறியல் கைவிடப்பட்டது. வாலிபர்கள் பட்டா கத்தியை காட்டி கிராமமக்களுக்கு கொலை மிரட்டல் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu