பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பெண்கள்
தனியார் கண்டெய்னர் தொழிற்சாலை முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி கொண்டக்கரை அருகே கவுண்டர் பாளையம் பகுதியில் அமைந்துள்ள பே கண்டெய்னர் டெர்மினல் எனும் தனியார் நிறுவனம் கண்டெய்னர்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறது. இதில் கவுண்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சட்ட படி இ. எஸ்.ஐ மற்றும் பி.எஃப் ஆகிய அரசு சலுகைகளை அளிக்காத வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அல்லது நிர்பந்தம் செய்து வேலை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பெண்கள் பெரிதும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இப்படி பெண்களை நம்ப வைத்து ஏமாற்றி பெண்களை கட்டாயப்படுத்தி அரசு சலுகைகளை ஏதும் இந்த நிறுவனத்தில் பயன்பெறாத வகையில் வேலை வாங்கியதால் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சென்னை டி.எம் எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகம், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தலைவர் மற்றும் துணை இயக்குனர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் மனுக்களை அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று பெண்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உண்டான அரசு சலுகைகளை பெற்று தர கோரி பே கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் சம்பந்தப்பட்ட பெண்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அளித்த உறுதியின் பேரில் பெண்கள் பணிக்கு சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu