மீஞ்சூர் அருகே 100 நாள் வேலை வழங்க கிராம மக்கள் சாலை மறியல்

மீஞ்சூர் அருகே 100 நாள் வேலை வழங்க கிராம மக்கள் சாலை மறியல்
X

100 நாள் வேலையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் அருகே 100நாள் வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த ஊராட்சியில் கடந்த சில நாட்களாக முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 100நாள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களாக இந்த வேலையை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லையென்று ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கூலித் தொழிலாளர்கள் தெரிவிக்கையில், இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் 100நாள் வேலையை மட்டுமே நம்பியுள்ளதாகவும்,கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலையை வழங்கவில்லை என்றும், எனவே அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு 100நாள் வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீஞ்சூர் - காட்டூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பேசி 100நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!