பெரியபாளையம் அருகே இளைஞரிடம் கத்தி முனையில் பணம் பறித்த இருவர் கைது

கைது செய்யப்பட்ட ரஃபி மற்றும் கௌதம்.
பெரியபாளையம் அருகே ஆரணியில் கடைவீதிக்கு சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆரணி நடுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் தில்லைராஜன்(18).இவர் ஆரணி பஜார் வீதிக்கு செல்லும்போது அவரை வழிமறித்த கௌதம்,ரஃபி ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தில்லைராஜனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த நிலையில் தில்லை ராஜன் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தில்லைராஜனின் தாயார் அம்பிகா அளித்த புகாரின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் ஆரணி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆரணி கோமுட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்த ரஃபி(22),சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கௌதம்(29) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் இதுபோல் வேறு எங்கும் வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்று விசாரணை நடத்தினர்.ஆனால் அதுபோன்ற தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu