அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு!

அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு!
X

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சாம்பல் கழிவுகளை பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், அனல் மின் நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகள் குழாய்கள் மூலம் செப்பாக்கம் கிராமத்தின் அருகே குளத்தில் சேகரித்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த குளத்தில் இருந்து பறக்கும் சாம்பல் கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். தற்போது சில குடும்பங்களே இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

அனல்மின் நிலைய கழிவு நீர் கால்வாய்

சாம்பல் கழிவுகளைக் குளத்திற்கு கொண்டு செல்லும் ராட்சத குழாய்களில் அவ்வப்போது உடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர், கிராமத்தை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை அடுத்துள்ள மௌத்தம்பேடு கிராமத்திற்கும் சாம்பல் கழிவு பரவிவருகிறது.

அதிக அளவில் ஏற்படும் சாம்பல் கழிவுகளால் இந்த ஊரில் வசிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அந்த நீரையே குடிப்பதற்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் செல்லும் ராட்சத குழாய்கள்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் குளம் குட்டைகளையும் மாசுபடுத்தி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.

நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் மற்றும் காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள், சாம்பல் கழிவு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாக மக்களுக்கு உறுதி அளித்தனர்.

அதிகாரிகள் தங்களது பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழக முதலமைச்சர் தொடங்கியுள்ள இணையதளத்தில் புகார் அளித்து, அவரது கவனத்திற்கு கொண்டு செல்வோம் என கிராமம் தெரிவித்தனர்.

Tags

Next Story