ஊருக்குள் வந்த கனரக லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம்

கனரக லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுங்கக்கட்டணத்தை தவிர்ப்பதற்காக சோழவரம் அருகே குடியிருப்புப் பகுதி வழியே சென்ற கனரக லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நல்லூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. ஆந்திராவிலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஆந்திராவிற்கும் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சிறு முதல் கனரக வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தி கடந்து செல்கின்றன. இந்நிலையில் சுங்கக்கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அருகிலுள்ள சிறுணியம் கிராமத்தின் வழியே செல்கின்றன.
இதனால் சிறுணியம் கிராமத்தில் சாலைகள் சேதமடைந்தும், குண்டும் குழியுமாக மாறியும் சுற்றுச்சூழல் மாசடைந்து பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறி அவ்வழியே சென்ற கனரக லாரியை கிராம மக்கள் மடக்கி சிறைப்பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் பொது மக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கிராம மக்கள் அவர்களிடம் இந்த சுங்க சாவடியால் நாங்கள் தினமும் தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தி செல்வதை தவிர்ப்பதற்காக நேஷனல் பர்மிட் வாங்கிய சரக்கு லாரிகள் கூட எங்கள் கிராமத்தின் வழியாக செல்கிறார்கள். இதனால் எங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் வியாதிகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே லாரிகளை இங்கு வர அனுமதிக்க கூடாது, இல்லை என்றால் சுங்க சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu