புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் ஆய்வு!

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆற்றங்கரை உடைப்பு, நெற்பயிர் சேதம், படகுகள் சேதம் குறித்து ஒன்றிய குழுவினர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவின் ஏ.கே.சிவ்ஹரே, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை, விஜயகுமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, பவ்யா பாண்டே எரிசக்தி துறை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஒன்றிய குழுவிற்கு பாதிப்புகளை விளக்கி கூறினார். புழல் ஏரியில் ஒன்றிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது புழல் ஏரியின் உறுதிதன்மை, உபரிநீர் வெளியேற்றும் ஷட்டர் பகுதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் புழல் ஏரி உபரிநீர் வெளியேற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதத்தையும், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மீஞ்சூர் பகுதியில் பொன்னேரி - திருவொற்றியூர் சாலை சேதம் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து வன்னிப்பாக்கம் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார்கள் பழுது குறித்து பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து தத்தைமஞ்சி கிராமத்தில் புயல், மழை வெள்ளத்தில் சேதமடைந்த பழங்குடியின மக்கள் குடிசைகளை பார்வையிட்டனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர். கதிர்வரும் நேரத்தில் மழைநீரில் மூழ்கி சூல் அனைத்தும் வீணானது குறித்தும், தேங்கிய தண்ணீரில் நெற்பயிர்களின் வேர் அழுகியது குறித்து விவசாயிகள் ஒன்றிய குழுவிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்து பார்வையிட்டனர். தொடர்ந்து பழவேற்காட்டில் படகுகள் சேதம் குறித்து பார்வையிட்டனர். பைபர் படகுகள் பாதிப்பு, வலைகள் சேதம், எஞ்சின்கள் சேதம் அவற்றின் விலை குறித்து அப்போது பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஒன்றிய குழுவினரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது ஆய்வை முடித்து கொண்ட மத்திய குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு டெல்லிக்கு சென்று ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒன்றிய குழுவினர் வெளிச்சம் முற்றிலும் குறைந்த பிறகு இரவு நேரத்தில் நெற்பயிர், படகுகள் சேதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu