சோழவரம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரனோடையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார். அதிகாரிகளுடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காரனோடையில் மாநகர பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்குன்றம், கோயம்பேடு, தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி உட்பட பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் ஏதும் செய்து தரப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.இதனால் பொறுமையிழந்த கம்யூனிஸ்ட் கட்சியனர் இன்று காரனோடை பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் நடத்த வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்தனர். ஆனால் தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலைமறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றான கழிப்பறை அமைப்பதற்காக பேருந்து நிலையத்தின் ஒருபகுதியில் இடத்தை தேர்வு செய்து அதற்கான அளவீடும் செய்து பணியை துவக்கினர்.இதனை தொடர்ந்து அங்கு வந்த போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இந்த வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்ட அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேலதிகாரிகளிடம் முறைப்படி விண்ணப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அலட்சியமாக கூறினர். இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடந்த 30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் என்ன செய்தீர்கள் என கேள்வியெழுப்பினர். இதனால் மிரண்டுபோன அதிகாரிகள் ஒரு வாரத்தில் ரத்து செய்யப்பட்ட அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும், புறவழிச்சாலையில் செல்லும் பேருந்துகள் காரனோடை வழியே வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
ஒருவாரத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu