பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி மூலமாகவே அனைத்து பாடங்களையும் நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம், கேரளா, தெலுங்கானா மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் 1969ம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தமிழர்கள் செய்த உயிர்த்தியாகம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கவேண்டும் என மறைந்த ஜவகர்லால் நேரு அளித்த உறுதி மொழிக்கு எதிராக இத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கிறது. இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தீக்குச்சியை உரசிப்பார்க்க நினைக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் பொன்னேரி சுற்றியுள்ள தடம்புரம்பாக்கம், மெத்தூர், மீஞ்சூர், பட்ட மந்திரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, தண்டலம், கும்மிடிப்பூண்டி, புதுவயல், தச்சூர், பஞ்செட்டி, சோழவரம், திருநிலை, பழவேற்காடு, தத்தமஞ்சி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இந்தி திணிப்பை எதிர்த்து சமீபத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர். பன்முக மொழித்தன்மை கொண்ட இந்தியாவில் இந்தியை திணித்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் மத்திய அரசின் திட்டம் பலிக்காது என அப்போது அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தூண்ட வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கையும் விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu