கழிவறையில் விழுந்து மாணவன் உயிரிழப்பு: சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

கழிவறையில் விழுந்து மாணவன் உயிரிழப்பு: சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

பொன்னேரி தனியார் பள்ளி கழிவறையில் மாணவன் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சதீஷ் என்பவரது மகன் பிரகதீஷ்வரன். இவர் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் இன்று பிரகதீஷ்வரன் பள்ளிக்கு சென்ற நிலையில், பள்ளியில் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

தனியார் பள்ளியில் இருந்து தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் பிரகதீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கழிவறையில் மாணவன் வழுக்கி விழுந்ததாக கூறும் சம்பவம் சந்தேகம் அளிப்பதாகவும் பிரகதீஷ்வரன் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாணவன் காயமடைந்தது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் உரிய தகவல் தரப்படவில்லை எனவும், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பள்ளி நிர்வாகத்திடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!