சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆறு வாரங்கள் பக்தர்கள் வந்து நெய் தீபம் ஏற்றி கோவில் சுற்றி வந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இக்கோவிலில் கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 1கோடி மதிப்பீட்டில் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 17ஆம் தேதியன்று ஆலய வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் கொண்டுவரப்பட்ட புனித நீரை மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான கோபுரங்களுக்கு வேலூர் இணை ஆணையர் ஸ்ரீ லட்சுமணன் தலைமையில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே. கோவிந்தராஜன், வி.ஜி. ராஜேந்திரன், துரை சந்திரசேகர், அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், உதவி ஆணையர் சித்ராதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார், ஆலய தலைமை குருக்கள் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, மற்றும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த ஆலயங்களினட செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வந்த வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கான இட வசதிகளையும் ஆலயத்தின் சார்பில் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu