அகத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா
சிறப்பு அலங்காரத்தில் அகத்திஸ்வரர் ஆலயம் ஆட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத தேய்பிறை சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை ஆனந்த லிங்கேஸ்வரருக்கு, ஆனந்த வள்ளி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக மாலை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், பன்னீர், விபூதி போன்ற பல்வேறு வாசனை திரவியங்களுடன் செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஆனந்தவள்ளி தாயாருக்கும், அகத்தீஸ்வரருக்கும் மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஜொலித்த நந்தி பகவானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ உற்சவர் அகத்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் 5 முறை ஆலய மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவில் பஞ்செட்டி, பொன்னேரி, தச்சூர், ஜனப்பச் சத்திரம், ஆரணி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu