சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்கு சரக்கு வாகனங்களுக்கு தனி வழி
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பொதுமக்கள் வாகனங்கள் எளிதாக பயணிக்கும் வகையில் துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. அதிவேகம், சாகசங்கள், அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆவடி காவல் ஆணையர் சங்கர் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் சங்கர் பொதுமக்களின் வாகனங்கள் எளிதாக பயணிக்கும் வகையில் துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
மேலும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் ஆணையர் பேசுகையில் சாலையை சீரமைப்பதற்கும், மின்விளக்கு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில் அது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu