பாலியல் சீண்டல் வழக்கில் கைதானஆசிரியரை விடுவிக்ககோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (48) என்பவர் இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியின் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஆரோக்கியராஜை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று தனியார் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் ஆரோக்கியராஜ் தங்களை குழந்தைகள் போல பாவித்து பாடம் நடத்தி வந்தவர் எனவும், நிச்சயம் தங்களுடைய ஆசிரியர் தவறிழைத்திருக்க மாட்டார் என மாணவர்கள் உறுதிபட தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட தங்களுடைய ஆசிரியரை விடுவிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை மட்டுமே நாடி ஜாமீன் பெற வேண்டும் எனவும், அடுத்தகட்டமாக வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் கேட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக சுமார் 2மணி நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu