எண்ணூர் துறைமுகத்தில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து ரஷ்ய ஊழியர் பலி

மீஞ்சூர் காவல் நிலையம் பைல் படம்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க வந்த ரஷ்ய நாட்டு கப்பலில் கிரேன் ரோப் அறுந்து பொருட்கள் விழுந்ததில் ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் பலியானார். இது தவிர மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக கிரேன் ஆப்பரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்களில் அன்றாடம் ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது உண்டு. அதே போல் இங்கிருந்தும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான கப்பல்களில் இருந்து கண்டெய்ன்களில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும்.
அந்த வகையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கேப்டன், மாலுமி உள்ளிட்ட 18 ஊழியர்களுடன் கடந்த 9தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. அங்கு கார்கோ சரக்குகள், கனரக வாகனம் மற்றும் உதிரி பாகங்களை கப்பலில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்றிரவு கிரேன் மூலம் பொருட்களை ஏற்றும் போது திடீரென கிரேனின் ரோப் அறுந்து விழுந்தது. இதில் ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஊழியர் கான்ஸ்டான்டின் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த கப்பல் ஊழியர் ரொம்மல் கேஸஸ் என்பவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை கப்பல் மற்றும் துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் உயிரிழந்த ரஷ்ய நாட்டு ஊழியரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் ஆப்பரேட்டர் சீனிவாசன் என்பவரை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் இறந்த ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் பற்றி இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் காயம் அடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் பற்றியும் அவரது குடும்பத்தினருக்கு தூதரகம் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரச்சினைக்குரிய கிரேன் ரோப் அறுந்து விழுந்தது எப்படி? அது உண்மையிலேயே பலவீனமாக இருந்ததா? அப்படி என்றால் அதனை சரியாக கவனிக்காதது யார் குற்றம்? இதில் திட்டமிட்டு வேறு ஏதாவது சதி திட்டம் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த ரஷ்ய நாட்டை சேர்ந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்கு பின்னர் சொந்த நாட்டிற்கு அனுப்புவது என்றால் அது தொடர்பான நடைமுறைகள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu