பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தில் காளத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டும் விளைநிலங்களில் சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 18ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதனை மீட்க வேண்டும் என தனிநபர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தினை மீட்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை மீட்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன் என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து கோவில் நிலத்தில் உள்ள 40வீடுகளை கையகப்படுத்தும் வகையில் அவற்றுக்கு சீல் வைப்பதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளே வர விடாமல் தடுத்த பொதுமக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொன்னேரி - செங்குன்றம் சாலையில் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 50ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்றினால் எங்கே செல்வது என கேள்வி எழுப்பினர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டண அட்டை என ஆவணங்களை சாலையில் வீசி எரிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தின் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போராட்டத்தின் நடுவே கிராம இளைஞர்கள் இருவர் அங்கிருந்த செல்போன் டவரின் மீதேறி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் அவர்களிடம் சமாதானம் பேசி கீழே இறக்கினர். தொடர்ந்து பலத்த மழை பெய்த போதும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலை கைவிட மறுத்தனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - செங்குன்றம் சாலையில் சுமார் 6 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் சாலை மறியல் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாயினர்.
தொடர்ந்து கிராம மக்களிடம் சமரசம் பேசிய அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவு என்பதால் அதனை நிறைவேற்றியே தீர வேண்டும், உங்களது கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணுங்கள் என கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிலத்தில் உள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை சுமார் 10மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறநிலையத்துறை அதிகாரிகள் நிறைவேற்றினர். பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம், சாலை மறியல், செல்போன் டவரில் போராட்டம், கொட்டும் மழையில் போராட்டம், போலீசார் குவிப்பு என நாள் முழுவதும் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu