பொன்னேரி ஆரணியாற்றில் சட்ட விரோத மணல் குவாரியை கண்டித்து சாலை மறியல்

பொன்னேரி ஆரணியாற்றில் சட்ட விரோத மணல் குவாரியை கண்டித்து சாலை மறியல்
X

பொன்னேரி அருகே மணல் கொள்ளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி ஆரணியாற்றில் சட்ட விரோத மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆரணியாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நகராட்சியில் ஆரணியாற்றை ஒட்டி அமைந்துள்ள தனியார் நிலத்தில் இருந்து கட்டுமான பணிகளுக்காக சவுடு மண் எடுத்து செல்ல அனுமதி வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆற்றில் இருந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார் தெரிவித்து ஆற்றை ஒட்டி அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்புவாசிகள் பொன்னேரி - செங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியாற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மழைக்காலங்களில் ஆற்று வெள்ளம் ஏற்கனவே தங்களை அச்சுறுத்தி வருவதாகவும், தற்போது ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுவதாகவும், மேலும் ஆற்றின் கரையை பலவீனப்படுத்துவதால் பொன்னேரி வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். தனியார் இடத்தில் அனுமதி பெறப்பட்டு ஆற்றில் இருந்து மணல் எடுத்து செல்லப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர்.

மழைக்காலங்களில் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக ஆற்றங்கரையை ஒட்டி வசிப்பவர்கள் அங்கிருந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆற்றில் மணல் குவாரி என்ற பெயரில் நடந்து வரும் மணல் கொள்ளையால் ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். மேலும் இருபுறங்களிலும் ஆற்றின் கரைகளை உடைத்து சேதப்படுத்தி ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் முற்றிலுமாக சரிந்து விடும் அபாயம் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். ஆற்றில் இருந்து மணலை எடுத்து விட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் எப்படி நிலத்திற்குள் புகும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாக தமிழக அரசு ஆரணியாற்றில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீரை பாதுகாத்து பொன்னேரியையும் வெள்ள பாத்திப்பில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதனிடையே பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்த பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மண் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக பொன்னேரி - செங்குன்றம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!