புதுப்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

புதுப்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்
X

சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.  

பொன்னேரி அருகே புதுப் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் குடும்பத்தினரை கைது செய்ய கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் - முத்துலட்சுமி தம்பதியரின் மகள் ஆர்த்தி என்கிற தனலட்சுமிக்கும் (20) சிறுவாக்கம் சானார்பாளையத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.


ஆர்த்தி என்கிற தனலட்சுமி (கோப்பு படம்)

இந்நிலையில் நேற்று தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு கணவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சேகர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தமது மகளை பணம், நகை கேட்டு நச்சரித்து, தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்த கணவர் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பொன்னேரி போலீசார், சார் ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


தொடர்ந்து பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் சாதகமான பதிலளிக்காததால் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது மகளை கொடுமைப்படுத்தி கொன்ற கணவர் குடும்பத்தினரை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெற்று கொள்வோம் என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story