கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று காலை காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பொன்னேரி சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.
இருசக்கர வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து பொருட்களை வாங்கி செல்வதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் அதிக கூட்டம் சேர்க்கும் கடைகளுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பகல் 12வரை கடைகளை திறந்து வைக்க அனுமதியளித்திருந்த நிலையில், தற்போது காலை 6மணி முதல் 10மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என நேரம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் குவிவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறி, பூ உள்ளிட்ட விரைவில் அழுகி வீணாகும் பொருட்கள் என்பதால் அவற்றை விற்பனை செய்யும் கடைகளை முன்பிருந்தது போல நேரத்தை பகல் 12மணி வரை நீட்டிக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் இருசக்கர வானங்களில் பொன்னேரிக்கு வருவதாலும் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகவும், சுற்றுப்புற இடங்களில் இருந்து வருபவர்களை போலீசார் கட்டுப்படுத்தினால் கடைகளில் கூட்டம் குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu