பொன்னேரி அருகே சாலை சீரமைத்து தரக்கோரி பஸ்சை சிறை பிடித்து போராட்டம்

பொன்னேரி அருகே சாலை சீரமைத்து தரக்கோரி பஸ்சை சிறை பிடித்து போராட்டம்
X

அரசு பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்.

பொன்னேரி அருகே காட்டாவூரில் சாலை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் அரசு பேருந்து சிறப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். 15.ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்தை சந்திப்பதாக புகார் கூறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டாவூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் காட்டாவூரிலிருந்து பொன்னேரிக்கு செல்லக்கூடிய சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து மண்சாலையாகவே காட்சியளிக்கிறது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் பொன்னேரி - அயநல்லூர் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதாகவும் மழைக்காலங்களில் சேறும், சகதியும் ஆக மாறி இந்த மண் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அலுவலகம் செல்வோர், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையில் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட ஊருக்கு வர மறுப்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் காவல்துறையினர் எதற்காக சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள் எனவும் சாலைக்கு பொறுப்புள்ள அதிகாரியை நேரில் வரவழைத்து உத்தரவாதம் அளிக்குமாறு கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததாக காவல்துறையினர் சமரசம் பேசியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு