கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்னேரியில் தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதிலும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இன்று 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டு கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பொன்னேரியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்க பணியாளர்கள் குடும்பம் அமைந்துள்ள இடத்திலிருந்து அதே மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவர்களை பணியமர்த்திட வேண்டும், இருப்பு இல்லாததை காரணம் காட்டி இரண்டு மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், மஞ்சள், மிளகாய் தூள், டீத்தூள், சோப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை தரமற்ற பொருட்களாக கடைகளில் இறக்கிவிட்டு அவற்றை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் எனவும் அதுவரையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu