கடலில் அத்துமீறி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் சிறைபிடிப்பு

கடலில் அத்துமீறி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் சிறைபிடிப்பு

பழவேற்காடு கடலில் அத்து மீறி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் சிறைபிடிப்பு ( கோப்பு படம்)

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கடலில் அத்துமீறி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் 41 பேரை பழவேற்காடு மீனவர்கள் சிறை பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பழவேற்காடு கடலில் அத்துமீறி பூம்புகார் மீனவர்கள் 41 பேர் மீன்பிடித்த போது அவர்களை சிறைபிடித்த விவகாரத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 6 மணி நேரத்திற்கு பின் உடன்பாடு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு கடலில் வெளிமாவட்ட மீனவர்கள், எல்லைத்தாண்டியும், தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதை அறிந்த மீனவர்கள், ஏற்கனவே அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி பூம்புகார் மீனவர்கள் சிலர், பழவேற்காடு கடலில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, அவர்களுடன் சமாதானம் ஏற்பட்டு, பழவேற்காடு மற்றும் பூம்புகார் மீனவர்களிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பழவேற்காடு கடலில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் பூம்புகார் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுமார் 7 டன் எடையுள்ள சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறி, விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 41 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.அவர்கள் அனைவரையும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்பு பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் பழவேற்காடு மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பூம்புகார் மீனவர்களுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் வட்டாட்சியர் மதிவாணன், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பழவேற்காடு கடலில் அத்துமீறி 5 நாட்டிகல் மைல் தூரத்தில் பூம்புகார் மீனவர்கள் அடிக்கடி மீன்பிடிப்பதாகவும், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் குறைவதோடு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால். விசைபடகு, மீன்பிடி வலை ஆகியவற்றை விட முடியாது என பழவேற்காடு மீனவர்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

பூம்புகார் மீனவர்கள் தரப்பில், தவறுதலாக எல்லை தாண்டியதாகவும், இனியும் இது போல் நடக்காது என கூறப்பட்டது.ஆனால் அதனை ஏற்காத பழவேற்காடு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் 6 மணி நேரமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

விசைப்படகு திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பது எனவும் மீன்பிடி வலை மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும் எனவும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தெரிவித்ததால் உடன்பாடு எட்டப்பட்டது.இதனையடுத்து 6 மணி நேரமாக நடந்த இருதரப்பு மீனவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story